
தேனி
கடமலைக்குண்டு கிராமத்திற்குள் அழையா விருந்தாளியாக வந்த கடமானை மீட்டு வனத் துறையினர் பாதுகாப்பாக காட்டுப் பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.
தேனி மாவட்டம், மேலப்பட்டி மலைப் பகுதியிலிருந்து சுமார் நான்கு வயது ஆண் கடமான் நேற்று அதிகாலை பெரியகுளம் அருகே உள்ள கடமலைக்குண்டு குடியிருப்புப் பகுதிக்குள் அழையா விருந்தாளியாக வந்தது.
இதனைக் கண்ட மக்கள் உடனடியாக கடமான் குறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கண்டமனூர் மற்றும் வருசநாடு வனத் துறையினர் கடமானை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
அதன்படி கடமானை காட்டுப்பகுதிக்குள் வனத்துறையினர் விரட்டினர். அப்போது, கடமான் மூலவைகை ஆற்றில் உள்ள உறை கிணற்றில் தவறி விழுந்து விட்டது.
பின்னர், தீயணைப்புத் துறையினர் வரவழைக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் கடமானை காப்பாற்றி மீண்டும் காட்டுப் பகுதிக்குள் வனத்துறையினர் பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.