சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பத்திர எழுத்தர்கள் போராட்டம்…

First Published Aug 4, 2017, 8:13 AM IST
Highlights
deed clerks struggle to sub register office


திருச்சி

அரசு செய்ல்படுத்திய திட்டமான ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆவதைக் கண்டித்து பத்திர எழுத்தர்கள், சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சொத்து கிரைய பத்திர ஆவணங்களை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும்போது ஏற்படும் காலதாமதம், வீண் அலைச்சல் போன்றவற்றை தடுப்பதற்காக தமிழக அரசு “ஆன்லைன்” மூலம் பத்திரங்களை பதிவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி திருச்சி கே.சாத்தனூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆன்லைன் பதிவுமுறை கடந்த 1–ஆம் தேதி தொடங்கியது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் அரசு அங்கீகாரம் பெற்ற பத்திர எழுத்தர்கள் சிலர் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பங்கள் கொடுத்திருந்தனர். பலர் ஏற்கனவே கடந்த சில நாள்களுக்கு முன் பத்திரபதிவு செய்ய விண்ணப்பித்து இருந்தனர்.

ஆன்லைன் மூலம் பத்திரபதிவு செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால் பத்திர எழுத்தர்கள் தாங்கள் கொடுத்த பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்று நேற்று காலை அலுவலகத்திற்கு ஆவலோடு வந்திருந்தனர்.

ஆனால், பத்திரங்கள் எதுவும் பதிவு செய்யாமல் அப்படியே கிடந்தது. மேலும், நேற்று ஆடிப்பெருக்கு விழா என்பதால் பத்திரப்பதிவு செய்ய நிறைய பேர் வந்திருந்தனர். இதனைக் கண்ட அவர்கள் பத்திரப்பதிவு அதிகாரியிடம் கேள்வி கேட்டனர்.

அதற்கு, “கடந்த 1–ஆம் தேதிதான் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகிறது. எனவே பத்திரங்கள் பதிவு செய்வதில் தாமதம் ஆகும்” என்றனர்.

இதனைக் கண்டித்து பத்திர எழுத்தர்கள், பத்திரப்பதிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தைக் கைவிட்டு அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

click me!