
ஆட்டோ, குடிசைகளுக்கு போலீசார் தீ… வீடியோ ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவு..
ஆட்டோ மற்றும் குடிசைகளுக்கு போலீசார் தீ வைப்பது போன்று வெளியான வீடியோ காட்சிகள் குறித்து குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டு உள்ளார்.
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துமாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். மெரினா அருகே உள்ள மீனவர்களின் கடைகள் மற்றும் குடிசைகளுக்கு போலீசார் தீ வைத்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் பகுதியில் உள்ள குடிசை வீட்டுக்கு பெண் போலீஸ் ஒருவர் தீ வைப்பது போன்ற வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானது.
வடபழனியில் ஆட்டோவுக்கு போலீஸ்காரர் ஒருவர் தீ வைத்து எரிப்பது போன்ற வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே போன்று சென்னை நகரின் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் புகுந்து போலீசார் பெண்களை சாமாரியாக தாக்கினர்.
மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை லத்தியால் போலீசார் அடிப்பது போன்ற காட்சிகளும் வெளியாகி உள்ளன. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியாகியுள்ள இந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, காவல் துறையினர் மீது பொது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசின் ‘சைபர் கிரைம்’ பிரிவு விசாரணைக்கு கமிஷனர் ஜார்ஜ உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே சென்னை நகரில் மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக மற்ற போலீஸ் பிரிவுகளில் இருந்து உயர் போலீஸ் அதிகாரிகளும், கூடுதல் போலீஸ் படையினரும் அழைக்கப்பட்டு உள்ளனர்.
அவர்கள் சென்னை நகர போலீசாரோடு இணைந்து இரவு–பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை நகர மக்கள் சமூக வலைத்தளங்களில் பரவும் வீணான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் ஜார்ஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.