2025-26 நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள், தொழில்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும், பீகார் தேர்தலை மையப்படுத்திய அறிக்கையாக உள்ளது எனவும் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
மத்திய பட்ஜெட்- விளாசும் தமிழக கட்சிகள்
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-–2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நேற்று (01.02.2025) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழக்த்திற்கு எந்த வித முக்கிய அறிவிப்புகளும் வெளியாகவில்லையென அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகிறது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், சுமார் 26 கோடி விவசாயத் தொழிலாளர்கள் உள்ள நிலையில், அத்திட்டம் குறித்து எவ்வித அறிவிப்பும் இன்றி ஒன்றிய அரசு கடந்து சென்றுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை கருத்தில் கொண்டால், பெட்ரோல், டீசல் விலையை கணிசமாக குறைக்க முடியும் என்ற பொருளாதார வல்லுநர்களின் ஆலோசனையை, நிதிநிலை அறிக்கையில் கருத்தில் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், இரட்டை வழி ரயில்பாதை திட்டம், ரயில் பாதை மின் மயமாக்கல் போன்ற தமிழ்நாட்டின் திட்டங்களுக்கும், இயற்கை பேரிடர் கால நிவாரணம் மற்றும் மறு வாழ்வு, புனரமைப்பு போன்ற இன்றியமையாத் தேவைகளுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
பீகார் மாநிலத்திற்கான பட்ஜெட்
தமிழ்நாட்டில் வரி என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளை கொள்ளை அடித்துச் செல்லும் ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கும், வளர்ச்சித்திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கவில்லை என்பது கண்டனக்குரியது. அதானி, அம்பானி போன்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு வழக்கம் போல் ஆதரவுக் கரம் நீட்டியுள்ள ஒன்றிய அரசு, தமிழ்நாட்டின் வளர்ச்சியை கவனத்தில் கொள்ளாதது ஓரவஞ்சனையே! முக்கியமாக, பீகார் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, அம்மாநிலத்திற்கு மட்டும் பல வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்று கூறுவதை விட, பீகார் மாநிலத்திற்காக ஒன்றிய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கையே எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும் என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மூன்றாவது முறை BJP ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படுகிற முழு நிதிநிலை அறிக்கை. சிறு குறு தொழில்களையும், விவசாயத்தையும் காப்பாற்றும் என்ற எண்ணத்தில் மண்ணை போட்ட நிதிநிலை அறிக்கையாக ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்திருக்கிறார். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்பட்டது என்ற முகத்திரையின் பின்னால் பட்ஜெட்டின் வளர்ச்சிக்கு உதவாத அறிவிப்புகள் மறைந்திருக்கின்றன.
வளர்ச்சிக்கு உதவாத பட்ஜெட்
விவசாய உற்பத்தி பொருட்களும் குறைந்தபட்ச விலையில் கிடைக்குமென்று எதிர்பார்த்த விவசாயிகள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். நீர் பாசன திட்டங்களுக்காக குறிப்பாக நதிநீர் இணைப்பிற்காக அறிவிப்பு இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு கடன் கொடுக்கப்படுமென்ற அறிவிப்பு இருக்கும் பொழுது கடனை திருப்பி கட்டுவதற்காக லாபம் ஈட்டும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
உலக சூழ்நிலைகளின் காரணமாக லாபம் குறைவாக ஈட்டுகின்ற தொழில்களுக்கு வட்டி சலுகை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏமாற்றப்பட்டு விட்டது. கேன்சர் மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு நாட்டின் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கேன்சரை உருவாக்குகின்ற தொழிற்சாலை மற்றும் நகரப் பகுதி கழிவுகள் கலக்கின்ற நீர் நிலைகளை மேம்படுத்த அறிவிப்புகள் இல்லை. கேன்சர் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளும் இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு உகந்த நிதிநிலை அறிக்கையாக இந்த நிதிநிலை அறிக்கை இல்லையென குறிப்பிட்டுள்ளார்.