
சல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவினர் ஈரோடு இரயில் நிலையம் அருகில் உள்ள காளை மாட்டு சிலைக்கு மாலை அணிவித்து, சல்லிக்கட்டுக்கான நிரந்தரச் சட்டத்தை வரவேற்றனர்.
தமிழர் பாரம்பரியமான சல்லிக்கட்டுக்கு உலகம் எங்கும் போராட்டங்கள் அரங்கேறின. தமிழகத்தின் ஈரோட்டில் கடந்த 18-ந் தேதி மாணவர்கள், இளைஞர்கள் என போராட்டக்களத்தில் இறங்கினார்கள். அவர்கள் இரவும், பகலும் ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அவர்களுடைய போராட்டத்தை ஒருங்கிணைத்துக் கொண்டுச் சென்ற சல்லிக்கட்டு ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கைலாசபதி, பாலமுருகன், ராஜேந்திரன், நடராஜ் ஆகியோர் நேற்று ஈரோடு இரயில் நிலையம் அருகில் உள்ள காளை மாட்டு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
“சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆறு நாள்களாக மாணவர்கள், இளைஞர்கள் என தொடர் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்த காவல்துறைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமாரும், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவலாளர்கள் முழுமையாக ஒத்துழைத்தனர்.
போராட்டத்தின் கோரிக்கைளை ஏற்று உடனடியாக அவசர சட்டத்தை கொண்டு வந்து சல்லிக்கட்டுக்கான தடையை நீக்கிய தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதேபோல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவிய தன்னார்வலர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
தமிழக அரசு சல்லிக்கட்டு தடையை நீக்க நடவடிக்கை எடுத்ததால் கடந்த 23-ஆம் தேதி காலையில் நாங்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டோம். அப்போது பெரும்பாலான மாணவ, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
ஆனால் சிலர் வ.உ.சி. பூங்காவை விட்டு வெளியேறாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை கலைந்துச் செல்லுமாறு காவலாளர்கள் தடியடி நடத்தினர். இதில், பலர் படுகாயம் அடைந்ததனர். சமூக விரோதிகள் என்று கூறி, அப்பாவி பெண்கள், சிறுவர் மீது தடியடி நடத்தியது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று அவர்கள் கூறினார்கள்.