பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம் - அண்ணா பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஏற்பாடுகள்...

First Published Jul 17, 2017, 7:36 AM IST
Highlights
counselling for engineering today

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று  தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழத்திற்கு உட்பட்ட பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்காக ஏராளமான மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் ரேண்டம் எண் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்று  முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று  தொழிற்கல்வி பாடப்பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. நண்பகல் 12க்கு தொடங்கி கலந்தாய்வு நடைபெறவுள்ளது. நாளை எஸ்.சி பிரிவினருக்கான கலந்தாய்வும், 19-ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. 

19 மற்றும் 20-ம் தேதிகளில் விளையாட்டுப் பிரிவு மாணவ-மாணவியருக்கான சான்றிதழ் சரிபார்ப்பும், அதனைத்தொடர்ந்து 21ம் தேதி அவர்களுக்கான கலந்தாய்வும் நடைபெறுகிறது. பின்னர் 23-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்கள், தங்களுக்கான அழைப்பு கடிதத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்றும், தேவையான அசல் சான்றிதழ்களை எடுத்துவர வேண்டும் எனவும், 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் வருகை தரவேண்டும் என்றும் அண்ணா பல்கலைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

 

 

click me!