யார் யாரெல்லாம் கொரோனா டெஸ்ட் எடுக்கனும்..? முக்கியமாக அவர்கள் எடுக்க வேண்டும்.. முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Jan 16, 2022, 5:05 PM IST
Highlights

கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிக்காட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது.
 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டில் இன்று ஒரு நாள் தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,71,202 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனாவுக்கு 314 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 1,38,331 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 16.66 சதவீதத்தில் இருந்து 16.28 சதவீதமாக குறைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 1,43,536 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 23,989 ஆக உள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி 1,489 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 23,989 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோல், நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா ஊரடங்கு கட்டுபாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இரவு நேர ஊரடங்கு, முழு ஊரடங்கு, சுற்றுலா தலங்கள் செல்ல தடை, நேர கட்டுபாடு, கடற்கரை செல்ல தடை, பள்ளிகள் மூடல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துதல், முக கவசம் அணிதல், கூட்டம் கூடுவதை தவீர்த்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கான திருத்தப்பட்ட வழிக்காட்டு நெறிமுறைகளை ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தொற்று உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என்றால் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை என்று புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இதை தமிழக சுகாதாரத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது, சளி, இருமல், காய்ச்சல், தொண்டைபுண், வாசனை மற்றும் சுவை இழப்பு, மூச்சு திணறல், சுவாச பிரச்சனைகள் போன்ற அறிகுறி இருப்பவர்கள் கண்டிப்பாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் அல்லது சிறுநீரக நோய் உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். சர்வதேச நாடுகளுக்கு செல்வோர், வெளிநாடுகளில் இருந்து வருவோர் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

இதனிடயே அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் வாரத்தில் ஒரு தடவைக்கு மேல் பரிசோதனை செய்யக்கூடாது. பிரசவத்துக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் நடைமுறைகள் உத்தரவாதம் அளிக்கும் வரை அல்லது அறிகுறிகள் உருவாகாத வரையில் பரிசோதனை எடுக்க வேண்டியதில்லை.

அதேசமயம் வயோதிகம் அல்லது இணை நோய் இல்லாதவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தாலும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதேபோல், அறிகுறிகள் இல்லாதோர், வீட்டுத் தனிமையிலிருந்து குணமடைந்தோர், மருத்துவமனையிலிருந்து குணமடைந்தோர் மற்றும் மாநிலத்திற்குள்ளேயே பயணம் மேற்கொள்வோர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள தேவையில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!