
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்றே குறைந்த நிலையில் தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரே இடத்தில் 34 பேருக்கு தொற்று ஏற்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சைதாப்பேட்டையில் உள்ள நீட் மற்றும் உயர் கல்வித்துறை பயிற்சி மையத்தில் ஒரு மாணவனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அனைவரும் பரிசோதிக்கப்பட்டனர். அதில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஒரு மாணவர் ஊருக்கு சென்று திரும்பி இருக்கிறார். அவருக்கு தொற்று ஏற்பட்டு மற்றவர்களுக்கும் பரவி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொற்றால் பாதித்த 34 பேரும் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள கொரோனா பராமரிப்பு மையத்தில் சேர்க்கப்பட்டனர். 100 படுக்கைகளுடன் இருக்கும் அந்த மைதானத்தில் தற்போது 34 மாணவ-மாணவிகள் மட்டுமே உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இன்று மட்டும் 1,155 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 27,48,045 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை ஜனவரி 10 ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுக்குறித்த அவரது உத்தரவில், ஜனவரி 10 ஆம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகளை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும், மழலையர், விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு ஜனவரி 10 ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடத்த தடை, அனைத்து பொருட்காட்சிகள், புத்தக காட்சிகள் நடத்தப்படுவது ஒத்திவைப்பு, திரையரங்குகள் உள்ளிட்ட அனைத்து அரங்குகளிலும் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி, உணவகங்கள், பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அமர்ந்து உணவு அருந்த அனுமதி.
விடுதிகள், தங்கும் விடுதிகளில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், துணிக்கடைகள், நகைக் கடைகள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், மெட்ரோ ரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி, திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 100 நபர்களுக்கு மட்டும் அனுமதி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சமாக 50 நபர்கள் பங்கேற்க அனுமதி, அழகு நிலையங்கள், சலூன்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி, உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி, பொது போக்குவரத்து பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டும் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.