உஷார் மக்களே.. ! சற்றுமுன் முக்கிய தகவல்.. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. தமிழக அரசு அறிவிப்பு..

By Thanalakshmi VFirst Published Apr 22, 2022, 11:41 AM IST
Highlights

தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
 

தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் மெல்ல மெல்ல குறைய தொடங்கியது. பிப்ரவரி இறுதியில், கொரோனா பாதிப்பு தொடங்கிய கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பை விட குறைவான தினசரி பாதிப்பு எண்ணிக்கை பதிவானது. இதனையடுத்து நடைமுறையில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தி கொள்ளப்பட்டன. மேலும் முக கவசம் அணியாத நபர்களிடம் அபராதம் வசூலிக்கப்படாது என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 25 க்கும் கீழ் குறைந்தது. கொரோனா உயிரிழப்பு பூஜ்ஜியமாகவே உள்ளது. இந்நிலையில் சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புதிய கொரோனா வைரஸ் திரிபான XE வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து நாட்டில் டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா,ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. 

அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் தினசரி பாதிப்பு ஆயிரத்துக்கும் கீழ் பதிவான நிலையில் கடந்த சில தினங்களாக 2 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு எண்ணிக்கை உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா உயிரிழப்பும் ஏற்ற, இறக்கமாகவே பதிவாகிறது. இந்நிலையில் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் மத்திய அரசு அறிவிறுத்தியது.

தமிழக்த்தை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு 30க்கும் மேல் பதிவாகியுள்ளது. இது முந்தைய வாரங்களை விட அதிகமாகும். இதனால் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். மேலும் தமிழகத்தில் முக கவசம் அணிவது கட்டாயம் என்றும் மாஸ்க் அணிவதிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பொது இடங்களில் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று  தெரிவித்தார். கொரோனா அதிகரிப்பால் பதற்றமடைய தேவையில்லை என்று மத்திய அரசே கூறியுள்ளது என்று அவர் கூறினார். கொரோனா தொற்று பரவலை தடுக்கும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் வரும் 8ம் தேதி மீண்டும் மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!