
ஜல்லிக்கட்டு விவகாரம் பெரும்புயலை கிளப்பினாலும் காவலர் ஒருவர் பாதுகாப்பு பணியின் போது மாட்டை நோக்கி தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த பரிதாபமும் நடந்துள்ளது. சமூக விரோதிகள் அவரை காளைமாட்டை நோக்கி தள்ளிவிடப்படும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போராட்டம் கடந்த 6 நாட்களாக நடந்து 7 வது நாளாக முடிவுக்கு வந்தது. மெரினா போராட்டக்காரர்கள் போர்வையில் இருந்தவர்கள் கலையாததாலும், திருவல்லிக்கேணியில் வன்முறை ஏற்பட்டதாலும் பொதுச்சொத்துகள் , மீனவர்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன.
ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்கப்பட்டதை அடுத்து தமிழகம் முழுதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டையில் மாடுமுட்டி ராஜா (29), மோகன்(30) ,களத்துப்பட்டியில் கருப்பையா எனபவரும் பலியானார்கள்.
இவர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்க்கப்போனவர்கள். இவர்கள் குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியிருக்க ஸ்ரீவில்லிப்புத்தூர் கான்சாபுரத்தில் பணி நிமித்தம் காரணமாக பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஷங்கர் (29) ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் பலியானார் என்ற செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
பாதுகாப்பு பணிக்கு போன காவலர் ஜல்லிக்கட்டு காளை வரும் வாடிவாசலில் இருந்து சில மீட்டர்கள் தூரத்தில் பணியில் இருந்தார். இவரோடு சேர்த்து வேறு சில காவலர்களும் ஆங்காங்கே பணியில் இருந்தனர்.
ஜல்லிக்கட்டு காளை விரர்களை பார்த்து சுவரோரம் ஒதுங்கி நிற்க அருகில் சுவரோரம் நின்றிருந்த ஷங்கரை குத்தி தூக்கி வீசியதில் தொண்டையில் கொம்பு குத்தி பலியானார்.
அவர் இறந்தது அனைவருக்கும் வருத்தமாக இருந்த நேரத்தில் அவர் மாடுமுட்டி கொல்லப்படும் காட்சியை சிலர் செல்போனில் படம் பிடித்திருந்தனர். இதை பார்த்த சக காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அந்த செல்போன் காட்சியில் காவலர் ஷங்கள் அருகே மாடு நின்று கொண்டிருக்க சுவரோரமாக பலரும் ஒட்டிக்கொண்டு நின்றுகொண்டிருக்கின்றனர். காளை மறுபுறம் பார்த்துகொண்டிருக்க திடீரென ஒரு கை காவலர் ஷங்கர் பின்னாலிலிருந்து அவர் தோள் மீது கைவைத்து பலமாக தள்ளிவிடுகிறது.
இதில் நிலைகுலைந்து போன அவர் காளைக்கு அருகே குப்புற விழுகிறார். குப்புற விழுந்த அவர் எழ முயற்சிப்பதற்குள் திரும்பி பார்த்த காளை வேகமாக தன் கொம்பால் ஷங்கரை குத்தி தூக்கி வீச தூக்கி எறியப்பட்டு மீண்டும் கீழே விழும் ஷங்கரை மீண்டும் குத்தி தூக்கி வீச அவரது கழுத்தில் காளையிம் கொம்பு குத்தும் காட்சி பதிவாகியிருந்தது.
அவரை தள்ளிவிட்ட ஆசாமி ரோஸ் கலர் சட்டை போட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அந்த மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் போலீசார் அந்த வீடியோ காட்சிகளை வாட்ஸ் அப்பில் வெளியிட்டு நியாயம் கேட்டு வருகின்றனர். இந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இரண்டு வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இரண்டிலும் காவலர் ஷங்கர் தள்ளிவிடப்படுவது தெளிவாக தெரிகிறது. இறந்து போன காவலர் ஷங்கருக்கு மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது. இது குறித்து அந்த மாவட்ட எஸ்பிக்கும் தகவல் சென்றுள்ளது.