
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தக் கோரி தொடர் ஓட்டம் நடத்த முயன்ற காவலர் வேல்முருகன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்த போலீஸ்காரர் வேல் முருகன் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். ஜெயலலிதாவுக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தபோது, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார்.
அடுத்து ஜெயலலிதா விடுதைலை செய்யப்பட்டதும் கோவிலுக்குச் சென்று மொட்டை அடித்துக் கொண்டார்.
ஜெயலலிதா மறைவையடுத்து, சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக வேல் முருகன் அறிவித்ததையடுத்து தேனி ஆயுதப் படை பிரிவுக்கு அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து அவர் ஓபிஎஸ் ஆதரவு நிலை எடுத்து வந்ததால்,அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
பின்னர் அவர் லோயர் கேம்ப்பில் உள்ள பென்னி குவிக் மணி மண்டபத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றார். இதையடுத்து வேல் முருகன் கைது செய்யப்பட்டார்.
‘இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி பென்னி குவிக் மணி மண்டபத்தில் இருந்து தொடர் ஓட்டமாக சென்னைக்கு சென்று ஆளுநரிடம் மனு அளிக்கப் போதாக அறிவித்திருந்தார்.
அதன்படி தொடர் ஓட்டம் செல்ல வேல் முருகன் முயன்றார். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து இது போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் வேல் முருகனின் அடுத்த அதிரடி எப்போது?