
தி.மு.க. பங்கேற்ற ரயில் மறியல் போராட்டத்தில் காங்கிரஸ் கலந்து கொள்ளவில்லை. இதனால், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஆரம்பமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழகத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் 2 நாள் ரயில் மறியல் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு தி.மு.க.-காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.
தமிழகம் முழுவதும் நேற்று பெரும்பாலான இடங்களில் தி.மு.க. சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. ஆனால் இந்த போராட்டத்தில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் பங்கேற்கவில்லை.
குறிப்பாக சென்னை பெரம்பூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில்ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க. தொண்டர்கள் பங்கேற்றனர். ஆனால், காங்கிரஸ் சார்பில் நிர்வாகிகள் ஒருவர் கூட பங்கேற்கவில்லை.
இதனால் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு விட்டதோ? என்று கட்சி தொண்டர்களே எண்ணும் நிலை ஏற்பட்டு உள்ளது. இது குறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
இந்த ரயில் மறியல் போராட்டத்தில் விவசாய சங்க நிர்வாகிகளுடன் இணைந்து ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டுட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆனால் எங்களை பொறுத்தவரை எந்த இடத்தில் யார் கலந்து கொள்ள வேண்டும் என்ற முறையான அறிவுறுத்தலை எங்கள் தலைமை (காங்கிரஸ்) எங்களுக்கு சொல்லவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையும் இது தொடர்பாக எங்களுக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. அதனால் தான் தி.மு.க. ரயில் மறியல் போராட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியவில்லை.
அதேநேரத்தில் காங்கிரஸ் சார்பில் சிலர் தனியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். வட சென்னை மாவட்ட பொறுப்பாளர் ராயபுரம் மனோ தலைமையில் தனியாக போராட்டம் நடந்தது என வருத்தத்துடன் கூறினார்.