செட் தேர்வு நேர்மையாக நடக்கல? - வசமாக சிக்கும் அன்னை தெரெசா பல்கலை கழகம்..!

First Published Mar 12, 2018, 2:39 PM IST
Highlights
Complimentary complaints on Mother Teresa University


அன்னை தெரசா பல்கலைக் கழகம் நடத்திய கல்லூரி பேராசிரியர் பணிக்கான "செட்' தகுதித் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு நெட்-செட் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அன்னை தெரசா பல்கலை கழகம் ஊழல் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தார். 

இதுகுறித்து அவர் அப்போது வெளியிட்ட அறிக்கையில், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வள்ளி, பதிவாளர் சுகந்தி ஆகிய இருவரும் சசிகலா உறவினர்கள் என்ற உரிமையில் பல்கலைக்கழக வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தாமல் தங்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளை மட்டும் எடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். 

அவர்களின் ஊழலுக்கு துணையாக இருந்த பொருளாதாரத்துறை பேராசிரியர் கலைமதிக்கு இரு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி, துணைவேந்தரின் கல்வி ஆலோசகர் என்ற பொறுப்பில் அமர்த்தியுள்ளதாகவும் அதைப்பயன்படுத்திக் கொண்டு கலைமதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள விரிவாக்க மையத்தையும், தொலைதூரக் கல்வி மையத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருவதாகவும் கூறப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். 

பகுதி நேர எம்.பில் படிப்பு பயிலும் 1532 மாணவிகளிடம் வாய்மொழித் தேர்வு நடத்தாமலேயே, நடத்தியதாகக் கூறி மதிப்பெண் வழங்க மொத்தம் ரூ.30 லட்சம் கையூட்டு வசூலித்திருப்பதாக மாணவிகள் புகார் தெரிவித்துள்ளதாகவும் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் நியமனத்திலும் பெருமளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும் அன்புமணி ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தார். 

இந்நிலையில், நேற்று தமிழ்நாடு நெட்-செட் சங்கத்தின் தலைவர் மதுசூதனன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது, அன்னை தெரசா பல்கலைக் கழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக செட் தேர்வு நடத்தி முடித்துள்ளதாகவும் வெளிப்படையான முறையில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிட பல்கலைக் கழக நிர்வாகம் மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற செட் 2018 தேர்வில் முதல் தாளில் கேட்கப்பட்ட 50 கேள்விகளில், 43 கேள்விகள் முந்தைய நெட் தேர்வுகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும்  எனவே, முதல் தாளை திரும்பவும் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

இந்தத் தேர்வு தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுவதால், செட் தேர்வு நடைமுறைகளை ஊழல் கண்காணிப்பு ஆணையம் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை கண்காணிப்பு செய்திட ஆளுநர் உத்தரவிட வேண்டும் எனவும் அரசு கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம், சுயநிதி கல்லூரி ஆசிரியர்கள் நியமனங்கள் மற்றும் உறுப்பு கல்லூரி ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நெட், செட் தகுதி தேர்வு தேர்ச்சி பெற்றவர்களை மட்டுமே நியமனம் செய்யும் வகையிலும் ஆளுநர் உத்தரவிடவேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

click me!