வணிக நோக்கத்தில் குடிநீர் எடுக்கும் ஆழ்துளைக் கிணறுகள் விரைவில் மூடப்படும் - வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவிப்பு…

First Published Aug 28, 2017, 8:54 AM IST
Highlights
commercial purposed Water wells will be close soon - Regional Development Officer


தூத்துக்குடி

தூத்துக்குடி ஊராட்சிப் பகுதிகளில் வணிக நோக்கத்தில் குடிநீர் எடுக்கப்படும் ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படும் என ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவராஜன் அறிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சிவராஜன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அதில், “தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராம ஊராட்சிப் பகுதிகளில் சில தனியார் நிலங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, வணிக நோக்கத்திற்காக தண்ணீர் உறிஞ்சப்படுவது குறித்து மக்களிடமிருந்தும், சமூக அமைப்புகளிடமிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் கிராம ஊராட்சிகளின் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றன. ஆழ்துளைக்

கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுவதை வரைமுறைப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட குமாரகிரி, கூட்டுடன்காடு, அல்லிகுளம் கிராம ஊராட்சிப் பகுதிகளில் வணிக நோக்கத்திற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்கள், குத்தகைதாரர்கள், தற்போதைய பயன்பாட்டாளர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு கிராம ஊராட்சி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏழு நாள்களுக்குள் ஆழ்துளைக் கிணறுகள் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்லை என்றாலோ அல்லது உரிய அனுமதி பெறப்படவில்லை என்றாலோ ஆழ்துளைக் கிணறுகள் அனைத்தும் முத்திரையிட்டு மூடப்பட உள்ளன.

எனவே, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் உள்ள ஏனைய ஆழ்துளைக் கிணறுகளின் உரிமையாளர்களும் உரிய அனுமதியின்றி தண்ணீர் எடுக்கக் கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

தவறும் பட்சத்தில் மேற்படி ஆழ்துளைக் கிணறுகள் மூடி முத்திரையிடப்படும்” என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

click me!