அரியலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 28 முதல் விளையாட்டு போட்டிகள் தொடக்கம் - ஆட்சியர் அறிவிப்பு...

First Published Jun 23, 2018, 8:45 AM IST
Highlights
coming 28 starts Sports Competitions in Ariyalur Collector annnounced


அரியலூர்
 
செயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 28-ஆம் தேதி முதல் கிராம ஊராட்சி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று அரியலூர் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேற்று செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் செயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது.

முதல் நாள் குழுப் போட்டிகளில் பங்கேற்கும் அணிகள், தனித்திறன் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் பெயர் மற்றும் இருப்பிட விவரங்கள் கிராம ஊராட்சியில் கிராம ஊராட்சி செயலாளரிடம் பதிவு செய்யவேண்டும். 

இரண்டாம் நாள் அனைத்துக் குழுப் போட்டிகளும் நடத்தப்படும். மூன்றாம் நாள் தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.

இந்த விளையாட்டு போட்டிகளில் ஒரு கிராமத்தில் பங்கேற்போர் வேறு கிராமத்தில் பங்கேற்க கூடாது. விளையாட்டு போட்டிகள் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. 

தடகளப்போட்டிகளில் (ஆண், பெண் இருபாலருக்கும்) ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய பிரிவுகளில் நடத்தப்பட உள்ளது. 

குழுப் போட்டிகளில் கைப்பந்து, கபடி ஆகியவை ஆண், பெண் இருபாலருக்கும் நடத்தப்பட உள்ளது.கால்பந்து விளையாட்டு ஆண்களுக்கு மட்டும் நடத்தப்பட உள்ளது. 

தனித்திறன் மற்றும் குழுப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் அவர்களுக்கென தேர்வு செய்யப்பட்ட இரண்டு விளையாட்டில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே நடத்தப்பட உள்ளது. 

எனவே, கிராம ஊராட்சியில் அமைந்துள்ள சுயஉதவிக்குழுக்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் வீரர்கள் - வீராங்கனைகள் உள்ளடக்கிய அனைவரும் அவரவர் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் முழுமையாக பங்கேற்று பயன் பெறலாம்" என்று அதில் அவர் கூறியுள்ளார். 

click me!