
விழுப்புரம்
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசூர் கல்லூரி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
‘நீட்’ தேர்வால் மருத்துவம் படிக்க முடியாததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், அனிதாவுக்கு நீதி கேட்டும், ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும் கல்லூரி மாணவர்கள், அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் அரசூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடூபட்டனர்.
அவர்கள் கல்லூரி முன்பு அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டபோது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், அனிதாவின் சாவுக்கு நீதி வேண்டும்” என்று முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்த தகவல் அறிந்த தாசில்தார் சுப்பிரமணியன், உளுந்தூர்பேட்டை துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) சுரேஷ்பாபு, திருவெண்ணெய்நல்லூர் உதவி ஆய்வாளர்கள் நடராஜன், பாலசுப்பிரமணியன் மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.