
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறுமலர் குழந்தைகள் காப்பகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி கொண்டாடப்பட்டது. தனது 69வது பிறந்தநாளை ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டுத் திட்டங்களை ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தமிழகம் முழுவதும் திமுகவினர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினர். மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் உள்ளிட்டோரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரிலும் தொலைபேசியிலும் சமூக வலைதளங்களிலும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைந்துள்ள சிறுமலர் குழந்தைகள் காப்பகம் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்து. இதனை குடும்ப ஆதரவற்ற பிள்ளைகளும், அருட்சகோதரிகளும் மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தனர். இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டு உணவருந்தினர்.