
சேலம்,
சேலம் அருகே வாகன சோதனையின் போது விபத்தில் இளைஞர் உயிரிழந்ததால், சோதனையில் ஈடுபட்ட காவலாளர்களை பொதுமக்கள் தாக்கி, காவல் வாகனங்களை அடித்து நொருக்கினர்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள கோனேரிப்பட்டியை சேர்ந்தவர் சரவணன் (24). தறிக்கூடம் வைத்து வேலை செய்து வந்தார்.
சரவணன் நேற்று முன்தினம் மாலை தறிக்கூடத்திற்கு தேவையான பொருட்களை வாங்க மோட்டார் சைக்கிளில் மெய்யனூர் சென்றார். அப்போது மகுடஞ்சாவடி காவலாளர்கள் வாகன சோதனையின் போது சரவணனை வழிமறித்தனர்.
இதனால் அவர், மோட்டார் சைக்கிளை திருப்ப முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி, சரவணனின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
இதுகுறித்து அறிந்த சரவணனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்தனர். ஆத்திரத்தில் அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பழனிசாமியை தாக்கினர்.
இதையறிந்து அங்கு சென்ற மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன், சப்–இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோரையும் பொதுமக்கள் தாக்கினர்.
மேலும், காவலாளர்களின் 2 மோட்டார் சைக்கிள்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பின்னர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைவு படை காவலாளர்கள் குவிக்கப்பட்டனர்.
அப்போது காவலாளர்கள் வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீசி தாக்கினர். காவலாளர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொதுமக்களை கலைய செய்தனர்.
இதனிடையே, கோனேரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலாளர்கள் மீது சிலர் இருட்டில் மறைந்திருந்து கல்வீசி தாக்கினர். இதில் 10–க்கும் மேற்பட்ட காவலாளர்கள் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் இளம்பிள்ளை பகுதியில் நேற்று 2–வது நாளாக பதற்றம் நீடித்தது. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி தலைமையில் ஏராளமான காவலாளர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரிகள் கூறுகையில், “காவலாளர்களை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள். காவலாளர்கள் வாகன சோதனையால்தான் சரவணன் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் என்றார்.