
அரியலூரில் உள்ள காந்திநகர் சாலைகளைச் சீரமைக்காவிட்டால், மழையின்போது தேங்கி நிற்கும் தண்ணீரில் நாற்று நட்டு போராட்டம் நடத்துவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் மாவட்டம், திருமானூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கிளைச் செயலர் ராஜா தலைமை தாங்கினார். கிளைச் செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயற்குழு உறுப்பினர் துரைசாமி, ஒன்றியச் செயலர் புனிதன் ஆகியோர் கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் திருமானூர் பேருந்து நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடத்தைச் சீரமைக்க வேண்டும்.
திருமானூர் கொள்ளிடக் கரையில் முண்டனார் கோயிலருகே சலவைத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்டுள்ள குளியல் தொட்டியை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.
வேலை உறுதித் திட்டத்தில், காந்திநகர் மக்களுக்கு பாரபட்சமின்றி பணி வழங்க வேண்டும்.
திருமானூரில் இருசக்கர வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும்.
காந்திநகர் சாலைகளைச் சீரமைக்க வேண்டும் தவறும்பட்சத்தில், மழையின்போது நாற்றுநடும் போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகி சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.