தொடரும் குவாரி விபத்து மீட்பு பணி.! உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் இழப்பீடு- முதலமைச்சர்

By Ajmal KhanFirst Published May 17, 2022, 12:38 PM IST
Highlights

 திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில்  சிக்கியர்வர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தெரவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க  உத்தரவிட்டுள்ளார். 
 

300 அடி குவாரியில் விபத்து

நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அடுத்த அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் வெடி வைத்து பாறைகள் தகர்த்தப்பட்டு கற்கள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 14ஆம் தேதி  வழக்கம்போல் சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரிக்குள் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் கற்களை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 300 அடி உயரத்திலிருந்து பாறைகள் மளமளவென சரிந்து விழுந்தது. இதில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்தில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்று காலை மேலும் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீட்பு பணி தீவிரம்

இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டம், தருவை கிராம அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14.5.2022 அன்று திடீரென மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளனர் விபத்து நடந்த இடத்தில் மாவட்ட நிர்வாகம் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் மூலமாக தீவிர மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன இவ்விபத்தில் அரியகுளம் கிராமம், ஆயர்குளத்தைச் சேர்ந்த திரு.பரமசிவன் என்பவரின் மகன் திரு.முருகன் (வயது 23) மற்றும் நான்குநேரி, இளையார்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகன் திரு செல்வன் வயது 25) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தி தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ளார்.

ரூ.15 லட்சம் வழங்க உத்தரவு

மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இதுதவிர, தொழிலாளர் நல வாரியம் மூலமாக தலா ஐந்து லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்வதாக முதலமைச்சர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார். விபத்து நடைபெற்று 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து பாறைகள் விழுந்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருந்த போதும் பாறைகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

click me!