
கோயில் திருவிழாவில் விபத்து
தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா நேற்று தொடங்கியது. இந்த விழாவின் போது தேர் திருவிழா விமர்சையாக கொண்டாடப்படும் அப்போது தேர் பவனி முடிவடைந்து கோயிலுக்கு தேர் வரும் சமயத்தில் மின் கம்பியில் தேரின் உச்சி பகுதி உரசியதில் மின் சாரம் பாய்ந்து 3 சிறுவர்கள் உள்ளிட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தஞ்சையில் முதலமைச்சர்
இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் மதுரை சென்றடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தஞ்சாவூர் வந்தடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், களிமேடு கிராம கோயில் மின் விபத்தில் உயிரிழ்ந்தவர்களின் உடல் வைக்கப்பட்டுள்ள அனைவருடைய வீட்டிற்கும் நேரடியாக சென்றார். அங்கு வைக்கப்பட்ட இறந்தவர்களின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிதி உதவி வழங்கிய முதல்வர்
இதனை தொடர்ந்து இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்த முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து மருத்துவமனையில் தீக்காயங்களோடு அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உயர்தர மருத்துவ சிகிச்சை வழங்குமாறு மருத்துவர்களை கேட்டுக்கொண்டார். தொடர்ந்து விபத்து நடைபெற்ற களிமேடு பகுதிக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், விபத்து நடைபெற்றது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
ரூ.5 லட்சம் இழப்பீடு
கோயிலில் ஏற்பட்ட மின் விபத்து தொடர்பாக கேள்வி பட்டதும் உடனடியாக இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சரை சம்பவ இடத்திற்கு நேரில் அனுப்பி வைத்திருந்தார். இதனையடுத்த இறவந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.