காலையிலேயே இப்படியா..?அன்பு அண்ணனை இழந்து விட்டேனே. கதறும் முதலமைச்சர் ஸ்டாலின்

Published : Jul 19, 2025, 10:46 AM ISTUpdated : Jul 19, 2025, 10:50 AM IST
mk stalin and mk muthu

சுருக்கம்

முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மூத்த மகனும், நடிகருமான மு.க. முத்து உடல்நலக்குறைவால் காலமானார். முதல்வர் ஸ்டாலின் தனது அண்ணன் மு.க. முத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin condoles the demise of M.K. Muthu : மு.க. முத்து தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் மூத்த மகனாவார். கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர் இன்று காலை காலமானார். மு.க. முத்து மறைவையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள இருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மு.க.முத்து மறைவு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், முத்தமிழறிஞர் கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.

காலையில் இடியாய் தாக்கிய செய்தி

தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் தலைவர் கலைஞர் அவர்கள். தலைவர் கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து அவர்கள். நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.

ரசிகர்கள் மனதில் குடியேறிய மு க முத்து

பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு இரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா' என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் தம்பி

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து அவர்கள். என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார், 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்