
தஞ்சாவூர்
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 12 பேரை கொன்ற சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று தஞ்சையில் அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் மீது காவலாளர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு புதுச்சேரி – தமிழக வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு மாநில செயலாளர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
தஞ்சை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சதாசிவம், செயலாளர் கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும்.
சட்ட விதிகளை மீறி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோரிக்கைகள் கொடுக்க வரும் தமிழக மக்களை சந்திக்க மறுத்து வரும் ஆட்சியர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோன்று, "ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு காரணமான தமிழக அரசை கண்டனம் தெரிவிப்பது,
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்" போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணம் – நாகப்பட்டினம் மண்டல அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தொ.மு.ச. பொதுச் செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், சி.ஐ.டி.யூ. பொதுச் செயலாளர் மணிமாறன், த.மா.கா. தொழிற்சங்க நிர்வாகி கலியன்,
ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி வைத்தியநாதன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் அனைவரும் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.