பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மக்களை தமிழக முதலமைச்சர் நேரில் சந்திக்க வேண்டும் - தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ அறிவுரை...

First Published Dec 11, 2017, 8:54 AM IST
Highlights
Chief Minister of Tamil Nadu should meet Kanyakumari victims - Tamilam Ansari MLA Advice


புதுக்கோட்டை

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்று ஜெகதாப்பட்டினம் மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஓகி புயல் காரணமாக ஏராளமான மீனவர்கள் இறந்துள்ளனர். இன்னும் பல மீனவர்கள் கரைக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில் ஓகி புயல் காரணமாகவும், வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாகவும் கடந்த 2-ஆம் தேதி முதல் நேற்று வரை ஒன்பது நாள்கள் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நேற்று ஜெகதாப்பட்டினத்திற்கு வந்தார்.

அப்போது, அவரை ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் போர்வை போர்த்தி வரவேற்றனர். பின்னர் கடலுக்கு செல்லாமல் ஒன்பது நாள்களாக வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், "ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட மக்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்.

கேரளா அரசு அம்மாநிலத்தில் செய்யும் நிவாரண உதவிகளுக்கு இணையாக தமிழக அரசும் செய்ய வேண்டும்.

கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் ஒன்பது நாள்களாக கடலுக்குச் செல்லாமல் உள்ளதால் மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பிற்கு இழப்பீடு தருவது குறித்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசுவேன்" என்று அவர் தெரிவித்தார். 

click me!