முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதத்தை எதிர்த்து முறையீடு!

First Published Apr 3, 2018, 11:25 AM IST
Highlights
Chief Minister fasting... Appeal to the High Court


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், உண்ணாவிரதம் இருப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதனை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்துவிட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே, மத்திய அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியல் அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டது. தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரி, காரைக்காலிலும் அ.தி.மு.க. அறிவித்த உண்ணாவிரத போராட்டம் அங்குள்ள நிர்வாகிகள் தலைமையில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இன்று அ.தி.மு.க. உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 8 மணியில் இருந்து மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் தொடர்கிறது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும்  துணை முதலமைச்சர்  ஓ பன்னீர் செல்வமும் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், அமைப்பு செயலாளர் எஸ்.கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் சத்தியா, வி.என்.ரவி, டி.ஜி.வெங்கடேஷ்பாபு, ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, தஞ்சாவூர், சேலம், கன்னியாகுமரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி, திருப்பூர், நாமக்கல், கோவை, விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், திருவாரூர், நெல்லை, சிவகங்கை, மதுரை, தர்மபுரி, நாகப்பட்டினம், நீலகிரி, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, வேலூர், தூத்துக்குடி, திருவண்ணாமலை, விருதுநகர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

தஞ்சையில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி. வைத்தியலிங்கம் தலைமையிலும், திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையிலும், நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணி, கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலும், கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளது அரசமைப்பு சட்டத்துக்கு புறம்பானது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செம்பியம் தேவராஜன் என்பவர் முறையீடு செய்துள்ளார். ஆளுநர் செயல்படாத நிலையில் ஆட்சியைள் கலைக்க மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறும், உயர்நீதிமன்றத்தில் கோரினார். 

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இந்திய குடமக்கள்தான் என்றும் அவர்கள் உண்ணாவிரதம் இருக்க உரிமை உண்டு என்றும் கூறிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, செம்பியம் தேவராஜனின் முறையீட்டை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ஏற்க மறுத்துவிட்டது.

click me!