அடுத்த மழை எப்போ...? ஆவலுடன் சென்னைவாசிகள்! அதற்கான பதில்...?

First Published Dec 9, 2017, 4:37 PM IST
Highlights
Chennai Water Supply Lakes levels 50 pc storage available at present


தயவுசெய்து சென்னைக்கு அடுத்த ரெய்ன்ஸ் எப்போன்னு மட்டும் கேக்காதீங்க. 

இணையத்தில் பலருக்கும் பரிச்சயமான தமிழ் நாடு வெதர்மேன் ப்ரதீப்பின் பதில்தான் இது. மழை வந்த நாட்களில் எல்லாம் விட்டுவிட்டு, இப்போது எப்போ மழை வரும் என்று பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.  சென்னைக்கு அடுத்த மழை எப்போது? என்றுதான் பலரும் இவரிடம் கேட்கிறார்களாம்...! 

இதனால், அடுத்த சில நாட்களுக்கு சென்னையில் மழை பெய்வதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. எனவே, சென்னைக்கு அடுத்த மழை எப்போது என்று கேட்க வேண்டாம் என்று பதில் கொடுத்திருக்கிறார் ப்ரதீப் தன் சமூகத் தளமான பேஸ்புக்கில்! 

அண்மையில் அந்தமானில்  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஒன்று உருவானது. அது தமிழக கடற்கரையில், அடுத்து சென்னைப் பகுதியில் சாதாரண மழைப் பொழிவை தரக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், அது கடல் பகுதியிலேயே பலவீனமடைந்து ஆந்திரா - ஒடிசா கடற்கரையை நோக்கிச் சென்றது. இதனால் சென்னையில் சிறிதுகூட மழை பெய்யவில்லை. இருப்பினும், இன்று ஒடிசா, வட ஆந்திரப் பகுதிகளில் மழை பெய்துவருகிறது. 

இந்நிலையில்,  சென்னைக்கு எப்போது மீண்டும் மழை பெய்யும் என்று மக்கள் செய்திகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, இப்போதைக்கு மழை இல்லை என்று பதில் சொல்லியிருக்கிறார் ப்ரதீப்.  

மேலும், தமிழ்நாடு வெதர்மேன் ப்ரதீப் தனது பேஸ்புக்கில், சென்னைக்கு குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அதில், சென்னையைச் சுற்றியுள்ள 5 ஏரிகளின் ஒட்டுமொத்த கொள்ளளவு 12,714 மில்லியன் கன அடி (12.7 டிஎம்சி). தற்போது இதில் 6,229 மில்லியன் கன அடி (6.2 டிஎம்சி) நீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 5 ஏரிகளிலும் சேர்த்து 1,602 மில்லியன் கன அடி (1.6 டிஎம்சி) மட்டுமே இருந்தது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமான தண்ணீர் தற்போதைக்கு ஏரிகளில் நிரம்பியுள்ளது.

கடந்த 2012, 2013, 2014, 2016ஆம் ஆண்டுகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, இந்த ஆண்டு ஏரிகளின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில்  உள்ளது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்.  

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட நீர்ப் பற்றாக்குறையை நமக்கு உதவிகரமாக இருக்கும் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகளும், கிருஷ்ணா நதியும் ஓரளவு சரி செய்ததை நாம் மறக்கக் கூடாது. கடந்த கால அனுபவங்களை வைத்துப் பார்த்தால், வரும் ஆண்டை நாம் எப்படியும் சமாளித்துவிடலாம்.

தயவு செய்து, சென்னைக்கு மழை எப்போன்னு மட்டும் கேட்காதீங்க. வரும் நாட்களில் மழை பெய்வதற்கான பாஸிட்டிவான வாய்ப்பு எதுவும் காணப்படவில்லை... - என்று குறிப்பிட்டுள்ளார் ப்ரதீப். 

click me!