
சென்னையில் 24 மணி நேரமாக தொடர்ந்து எரிந்து வரும் சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதையடுத்து தீயணைப்பு வாகனங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டன. ராட்சத ஹைட்ராலிக் இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
சென்னை தியாகராயநகர் சென்னை சில்க்ஸ் கட்டடம் நேற்றுஅதிகாலை 5 மணிக்கு திடீர் என தீ பிடித்தது. இந்த தீ படிப்படியாக கட்டடம் முழுவதும் பரவியது. நேற்று காலை முதல் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு குழுவினர் உட்பட பலர் தீயை அணைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் கட்டடம் 23 மணி நேரம் தொடர்ந்து எரிந்த நிலையில் இன்று அதிகாலை 3.20 மணிக்கு கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை என 5 தளங்கள் திடீர் என பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தன. இடிந்து விழுந்த கட்டடம் பெரும் பகுதி ஸ்ரீ குமரன் ஜுவல்லர்ஸ் இருந்த பகுதி என கூறப்படுகிறது.
அப்பகுதியில் இருந்தவர்களை ஏற்கனவே போலீசார் அப்புறப்படுத்தியிருந்ததால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டடம் முழுவதும் தீ பரவலாக எரிந்து வருகிறது.
ராட்சத ஹைட்ராலிக் இயந்திரங்களைக் கொண்டு தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது கட்டத்தின் மேற்கூரையும், மொத்த கட்டடமும் விரைவிலேயே இடிந்து விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கட்டடங்கள் முற்றிலும் இடிந்து விழுந்த பின்னர் மீட்புப் பணிகள் தொடரும் தீயணைப்புத் துறை அறிவித்துள்ளது.
விரைவில் கட்டடம் இடிந்து விமும் என்பதால் பொது மக்கள் யாரும் இருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.