சென்னையில் சிக்கியது நாய்கறியா? திடுக்கிட வைக்கும் உண்மை தகவல்!

By sathish kFirst Published Nov 18, 2018, 9:38 AM IST
Highlights

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 2000 கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலின் பின்னணியில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்துசென்னை எழும்பூர் வரும் ரயிலில் பதப்படுத்தப்படாத இறைச்சி கொண்டுவரப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் – சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இணைந்து நேற்று சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது 24 பார்சல் பெட்டிகளில் இருந்த இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. முறையாக  பதப்படுத்தப்படாமல் எந்த பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல் அந்த இறைச்சி கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த இறைச்சி எந்த விலங்குடையது என்று ஆய்வு செய்வதாக கூறி அதிகாரிகள் சில சோதனைகளை செய்தனர். உடனடியாக ஜோத்பூர் ரயிலில் வந்திருப்பது நாய்கறி என்றும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர உணவகங்களுக்கு விற்க கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவலை கசியவிட்டனர். இதனால் சென்னை மட்டும் இன்றி தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பேசும் பொருளானது.

உடனடியாக ரயில் நிலையத்திற்கு வந்த இறைச்சிக்கு சொந்தக்காரர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். ஆட்டு இறைச்சியை எப்படி நாய் இறைச்சி என்று கூறலாம்? எந்த அடிப்படையில் ஆட்டு இறைச்சியை நாய் இறைச்சி என்கிறீர்கள்? இறைச்சியை சோதனைக்கு உட்படுத்தாமல் எப்படி நாய் இறைச்சி என்று சொல்லலாம் என அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனால் செய்வது அறியாது திகைத்த அதிகாரிகள் ஓரமாக ஒதுங்கினர்.

மேலும் இறைச்சி கடை உரிமையாளர்கள் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி ஏற்றப்பட்ட வாகனத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாய் இறைச்சி என்று உறுதியாவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் எப்படி அவற்றை எடுத்துச் சென்று அழிக்கலாம் என குரல் எழுப்பினர். ஆனால் போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி வாகனத்தை அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பேசிய போது ஜோத்பூரில் இருந்து வந்தது ஆட்டு இறைச்சி என்று திட்டவட்டமாக கூறினர். முறையான விதிகளை பின்பற்றாமல் கொண்டு வந்தது தவறு தான் ஆனால் அதற்காக ஆட்டு  இறைச்சியை நாய் இறைச்சி என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? வழக்கமாக இது போன்று இறைச்சியை கொண்டு வருவதற்கு ரயில் நிலைய அதிகாரிகள் முதல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் வரை மாமூல் கொடுப்பது வழக்கம்.

இந்த முறை கூடுதல் மாமூல் கேட்டதாக கொடுக்க மறுத்தோம், அதனால் ஆட்டு இறைச்சியை சிறிதும் இரக்கம் இல்லாமல் நாய் இறைச்சி என்று கதை கட்டிவிட்டார்கள். நாய் இறைச்சி என்றால் சோதனைக்கு அனுப்ப வேண்டும் தானே? ஏன் அதிகாரிகள் சோதனைக்கு அனுப்பவில்லை? இதன் மூலமே அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. தங்களின் பணத்தாசைக்காக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தும் வகையில் நாய்கறி என்று கதைகட்டிய அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

click me!