
ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடி மீதான, 470 கோடி ரூபாய் முறைகேடு புகாரை, 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காமல் சென்னை போலீசார் கிடப்பில் போட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த புகாரை மும்பைக்கு மாற்ற திட்டமிட்டுள்ளதால் லலித் மோடியை இந்தியாவிற்கு கொண்டுவருவதில் மேலும் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளராக இருந்த சீனிவாசன்,கடந்த 2010ம் ஆண்டு அப்போது சென்னை காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரனை நேரில் சந்தித்து 25 பக்க புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ஐ.பி.எல். தலைவராக இருந்த லலித் மோடி 470 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாக கூறப்பட்டிருந்தது.
தொலைக்காட்சி உரிமம் வழங்கியதில் 425 கோடி ரூபாயும், வீரர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததில் 16 கோடி ரூபாயும், வர்த்தக விளம்பரம் செய்ததில் 29 கோடி ரூபாயும் முறைகேடு செய்திருப்பதாக அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. குற்றச் சதி, நிதி முறைகேடு, ஏமாற்றுதல் உள்ளிட்ட 8 பிரிவுகளில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில், கடந்த 2012ம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பலமுறை சம்மன் அனுப்பியும் லலித் மோடி ஆஜராகவில்லை. இதையடுத்து, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உத்தரவைப் பெற்று, ரெட்கார்னர் நோட்டீஸ் மூலம் அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து 2015ம் ஆண்டு சி.பி.ஐ. விடுத்த கோரிக்கையை நிராகரித்த இண்டர்போல் போலீசார், லலித் மோடிக்கு எதிரான ஆதாரங்களை அளிக்குமாறு கேட்டுள்ளனர்.
எனவே, லலித் மோடி மீதான முறைகேடு புகாரை விரைந்து விசாரிக்குமாறு சென்னை போலீசாருக்கு அமலாக்கத்துறை பலமுறை கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, இந்த வழக்கை, கடந்த மாதம் சென்னை காவல்துறையிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றி காவல்துறை இயக்குநர் உத்தரவிட்டார்.
இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகம் மும்பையில் இருப்பதாலும், பணப் பரிமாற்றம் எதுவும் தமிழகத்தில் நடைபெறவில்லை என்பதாலும் இந்த வழக்கை மும்பை போலீசாருக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு காவல்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிதிமுறைகேடு புகார் மீது அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த ஏதுவாக மகாராஷ்டிராவுக்கு மாற்றுவதே சரியாக இருக்கும் என அரசு வழக்கறிஞர்கள் பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. தற்போது கூறப்படும் காரணங்கள் மிகச் சாதாரணமானவை மட்டுமல்ல, முன்னரே மும்பைக்கு மாற்றியிருந்தால் வழக்கு விசாரணை குறிப்பிடத்தக்க கட்டத்தை எட்டியிருக்க வாய்ப்புள்ளது.
அமலாக்கத்துறை பலகடிதங்கள் எழுதியும், லலித் மோடி மீதான புகார்மீது சென்னை போலீசார் 7 ஆண்டுகளாக ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் 6 மாநகரக் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டும், யாருமே இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர்.
ஒரு வழக்கை விசாரிக்கலாமா கூடாதா என முடிவெடுக்க சென்னை போலீசார் ஏழு ஆண்டுகள் எடுத்துக் கொண்டது, மறைமுகமாக லலித் மோடியை காப்பாற்றும் செயல் அல்லவா என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.