
சென்னை ஓட்டேரியில் 5 நாட்களாக மழை நீர் வடியாதததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 5 நாட்களாக மின்சாரமும் இல்லாததால் பொதுமக்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சிறிய மழைக்கே கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகளில் ஒன்று சென்னை ஓட்டேரி. இந்நிலையில், கடந்த 4 நாட்களாக சென்னையில் கனமழை பெய்துவருவதால் ஓட்டேரி சுப்பராயன் தெருக்களில் தண்ணீர் தேங்கிய தண்ணீர் 5 நாட்களாக வடியாமல் இருக்கிறது.
இப்பகுதிக்கு அருகிலுள்ள ஐசிஎஃப் கால்வாய் பகுதியிலிருந்து கரிய நிற ஆயில் கலந்த வெள்ள நீர், ஓட்டேரி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. இதனால் வீடுகளின் தரை மற்றும் சுவர்களில் கரிய நிறத்தில் எண்ணெய் பிசுபிசுப்புடன் இருப்பதாகவும் தேங்கிய நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும் கனமழை காரணமாக கடந்த 5 நாட்களாக மின்சாரமும் இல்லாததால் ஆத்திரமடைந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மழைநீரை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.