
இந்தியாவின் ஹெடெக் நகரங்களில் ஒன்றான சென்னையில் வார இறுதி நாட்களில் நட்சத்திர சொகுசு ஹோட்டல்களில் போதை விருந்து படுஜோராக நடந்து வருவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிரபல ஸ்டார் ஹோட்டலில் உள்ள பப்பில் கஞ்சா, பெத்தமைன் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் போதை மருந்து நடந்து வருவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அங்கு சென்ற காவல் துறையினர் விடிய விடிய போதை விருந்தில் பங்கேற்ற 3 பெண்கள் உள்பட 17 பேரையும், ஹோட்டல் மேலாளர் சுகுமாரையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள், 3 கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள், சிறிதளவு போதைப்பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
அப்போது போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. அதாவது கைதானவர்கள் அனைவரும் வார இறுதி நாட்களில் ஒன்று சேர்ந்து ஸ்டார் ஹோட்டல்களில் போதை விருந்தில் பங்கேற்று வந்துள்ளனர். போதை விருந்தில் பங்கேற்பதற்காக ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி அதில் தகவல்கள் பரிமாறி வந்துள்ளனர். கைதானவர்களில் ஒரு பெண் ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளரின் மகள் என்பதை அறிந்து காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா?
கைதானவர்கள் அனைவரையும் காவல்துறையினர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், நீதிபதி அவர்களை ஜாமீனில் விடுவித்தார். இந்த போதை விருந்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் போதைப்பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் காவல்துறையினர், போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினருடன் இணைந்து செயல்படுகின்றனர்.
கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளை கண்டுகொள்ளவில்லையா?
இதற்காக தனிப்படைகள் அமைத்து போதைப்பொருள் நடமாட்டத்தை கண்டறிந்து போதை விருந்து நடைபெறும் ஹோட்டல்கள், ரகசிய இடங்களையும் காவல்துறையினர் கண்டறிந்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே பாராட்டை பெற்றாலும், போதை விருந்தில் பங்கேற்கும் கோடீஸ்வர வீட்டு பிள்ளைகளை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது குறிப்பிடத்தக்கது.