
வடகிழக்கு பருவமழையால் ஒரே நாளில் சென்னை குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் போக்குவரத்துவாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.
மேலும் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை தீவிரம் அடையும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், புதுவையிலும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
இன்று ஒரு நாளில் பெய்த கனமழையால் சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர். ஒரு நாள் மழைக்கே சென்னை இந்த அளவுக்கு மோசமாகியுள்ள நிலையில், இன்னும் 4 நாட்கள் எவ்வாறு தாக்குப்பிடிப்பது என மக்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.