
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து லட்சக்கணக்கானோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில், பெரும்பாலானோர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகும்.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். கோவை, மதுரை , திண்டுக்கல், தேனி, சேலம் உள்பட பல மாவட்டங்களில் இன்று அதிகாலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை போலீசார் விரட்டியடித்தனர். தட்டி கேட்டவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அறப்போராட்டம் நடத்தியவர்களை, போலீசார் கலைக்க முயன்றனர். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கடலில் இறங்கினர். இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் போலீசார் தடியடி மற்றும் கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதால், சென்னை நகரின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம், போராட்டம், சாலை மறியல் நடந்து வருகிறது. இதனால், சென்னை நகரம் முழுவதுமாக போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.
இதற்கிடையில், சென்னை ஐஸ்அவுஸ் காவல் நிலையத்துக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தீ வைத்து எரித்தனர். போலீசாரின் தடியடியில் தனியார் தொலைக்காட்சி நிருபரின் மண்டை உடைந்தது. ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களின் பதில் தாக்குதலுக்கு, போலீசார் சிலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.