சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு… காரில் வந்த சத்தத்தால் வெடிகுண்டு பீதி!

By vinoth kumarFirst Published Dec 18, 2018, 12:02 PM IST
Highlights

சென்னை விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் திடீரென பீப் சத்தம் எழுந்ததால், அப்பகுதியில் இருந்த மக்கள் அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதியில் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் திடீரென பீப் சத்தம் எழுந்ததால், அப்பகுதியில் இருந்த மக்கள் அது வெடிகுண்டாக இருக்குமோ என்று பீதியில் அதிர்ச்சி அடைந்தனர். 

சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில், பயணிகள் வருகை பகுதிக்கு எதிரே, கார்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு கடந்த 3 நாட்களாக ஒரு சொகுசு கார் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர், காரை  நிறுத்திவிட்டு, விமானம் மூலம் வெளியூர் சென்றுவிட்டார் என தெரிகிறது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென அந்த காரில் இருந்து பீப் சத்தம் கேட்டது. இதை பார்த்ததும், கார் பார்க்கிங் பகுதியில், பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தம் நிற்காமல் தொடர்ந்து ஒலித்து  கொண்டே இருந்ததால், வெடிகுண்டு இருக்குமோ என்ற பீதி ஏற்பட்டது. மேலும், 3 நாட்களாக நிறுத்தப்பட்டு இருப்பதால், அதில் ‘டைம் பாம்’ சத்தமா என்ற சந்தேகமும் எழுந்தது. 

இதையடுத்து உடனடியாக, விமான நிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்த கார்களை அப்புறப்படுத்தி,  தடுப்புவேலி அமைத்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தியபோது, அதில் வெடிகுண்டு இல்லை என தெரிந்தது. மேலும், காரில் உள்ள பேட்டரியில் பழுது ஏற்பட்டு, அதனால் பீப் சத்தம் ஒலித்து கொண்டிருப்பது தெரிந்தது. 

இதைதொடர்ந்து கார் மெக்கானிக் ஒருவரை வரவழைத்து, அந்த காரில் இருந்த பேட்டரில் ஏற்பட்ட பழுதை சரி செய்தனர். அதன்பின்னர், அந்த பீப் சத்தம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள், கார் எண்ணை குறித்து வைத்து கொண்டு, அதன் உரிமையாளர் வரும்போது, மெக்கானிக்கை வரவழைத்து சரி செய்ததற்கான கட்டணம் மற்றும்  விமான நிலையத்தில் இதுபோல் அசாதாரண சூழ்நிலை ஏற்படும்படி, பரபரப்பை ஏற்படுத்தியதற்கு அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.விமான நிலைய பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்ட காரில் திடீரென பீப் சத்தம் கேட்டதால், நேற்று மதியம் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

click me!