விரைவில் செஞ்சுரி அடிக்கும் சென்னை விமான நிலையம்!

By vinoth kumarFirst Published Sep 21, 2018, 4:57 PM IST
Highlights

சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. மேற்கூரை, கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள் உடைந்து நொறுங்குவது, சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுந்து உள்பட இதுவரை 79 முறை விபத்துக்கள் நடந்துள்ளன.

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச மற்றும் உள்நாட்டு முனையங்கள் ரூ.2200 கோடி செலவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு, கண்ணாடி மாளிகை போல் கட்டப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையத்தில் தொடர்ந்து விபத்துக்கள் நடந்து வருகின்றன. மேற்கூரை, கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள் உடைந்து நொறுங்குவது, சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள சலவை கற்கள் பெயர்ந்து விழுந்து உள்பட இதுவரை 79 முறை விபத்துக்கள் நடந்துள்ளன. இந்த விபத்துகளில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் இல்லை என்றாலும், பயணிகள், பயணிகளை வழியனுப்ப வந்தவர்கள், விமான நிலைய தற்காலிக பணியாளர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என  இதுவரை 14 பேர் காயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று மாலை 6.20 மணிக்கு 80வது விபத்து நடந்தது.சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின், பயணிகள் புறப்பாடு பகுதியில் விமான நிலையத்தின் பின்புறம் சுவரில் பொருத்தப்பட்டு இருந்த 5 அடி நீளம், 5 அடி அகலம் கொண்ட கண்ணாடி, 35 அடி உயரத்தில் இருந்து பயங்கர அச்சத்தத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

இதையறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வழக்கம்போல் வந்து ஆய்வு செய்தனர். உடனடியாக விமான நிலைய ஊழியர்கள் வந்து இடிபாடுகளை அவசர அவசரமாக அகற்றி, அந்த இடத்தை சுத்தம் செய்தனர். மேலும், கண்ணாடி விழுந்த இடத்தில் தற்காலிகமாக பிளைவுட் பலகை வைத்து அடைத்துள்ளனர். இன்னும் ஓரிரு தினத்தில் புதிய கண்ணாடிகள் பொருத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதுகுறித்து எவ்வித கருத்தும் சொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர். கண்ணாடி உடைந்த இடம் விமானம் நிற்கும் பகுதியாகும். அதிர்ஷ்டவசமாக கண்ணாடி விழுந்த பகுதியில் விமானமோ, விமான நிலைய ஊழியர்களோ, பயணிகளோ யாரும் இல்லை. இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.நேற்று மாலை கண்ணாடி விழுந்து உடைந்த சம்பவத்தால், விமான நிலைய ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். விமான நிலையத்தில் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர்.

click me!