‘டாடா’வின் புதிய தலைவர் தமிழர்!! டி.சி.எஸ். சந்திர சேகரன் டாடா சன்ஸ் சேர்மனாக தேர்வு!!!

First Published Jan 12, 2017, 7:54 PM IST
Highlights

டாடா சன்ஸின் புதிய தலைவராக நாமக்கல்லை சேர்ந்தவரும், டி.சி.எஸ். மென்பொருள் நிறுவன இயக்குனருமான சந்திர சேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா சன்ஸை நிர்வகிக்கும் பொறுப்பு தமிழர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மனாக இருந்த ரத்தன் டாடா 2012 டிசம்பர் 28ந்தேதி தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். அத்துடன் தனக்குப் பின்னர் டாடா சன்ஸ் நிறுவத்தின் சேர்மனாக சைரஸ் மிஸ்திரியை தேர்வு செய்தார்.

அதன் பின்னர் 4 ஆண்டுகளாக மிஸ்த்ரி அந்த பொறுப்பில் இருந்து வந்தார். அதுவரை மிஸ்திரிக்கும் ரத்தன் டாடாவுக்கும் சுமுகமாக இருந்து வந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, கடந்த அக்டோபர் 24ந்தேதி டாடா சன்ஸ் சேர்மன் பதவியிலிருந்து மிஸ்திரி நீக்கப்பட்டார். இடைக்கால தலைவர் என்கிற பொறுப்பு மீண்டும் ரத்தன் டாடா வசம் வந்தது.

அத்துடன் நிற்காமல் குழும நிறுவனங்களின் இயக்குனர்கள் குழுவில் இருந்தும், சிறப்பு பொதுக்குழு மூலமாக மிஸ்திரி நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் டாடா சன்ஸின் அடுத்த சேர்மன் யார் என்பது மிகப்பெரும் கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் நாடு முழுவதும் உருவெடுத்தது.

அடுத்த சேர்மனை தேர்வு செய்வதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அதில் இடைக்கால சேர்மன் ரத்தன் டாடா, வேணு சீனிவாசன், அமித் சந்திரா, ரோனென் சென், லார்டு குமார் பட்டாச்சார்யா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அடுத்த சேர்மனுக்கான போட்டியில் இருந்தவர்களின் உலகின் மிகச்சிறந்த சாஃப்ட்வேர் நிறுவனமும், டாடா குழுமத்தை சேர்ந்ததுமான டிசிஎஸ்.ஸின் நிர்வாக இயக்குனர் சந்திர சேகரன் முன்னணியில் இருந்தார்.

மேலும் ஹிந்துஸ்தான் லீவர் செயல் தலைவர் ஹரிஷ் மன்வாணி, ட்ரென்ட் நிறுவன இயக்குனர் நோயல் டாடா, இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பக்ளே உள்ளிடோரின் பெயர்களும் சேர்மன் பதவிக்கு அடிபட்டது.

இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான மும்பையில் இருக்கும் பாம்பே ஹவுஸில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் டிசிஎஸ் நடராஜன் சந்திரசேகரன் டாடா சன்ஸின் புதிய சேர்மனாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து பல லட்சம் கோடிரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஒரு தமிழர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பிறந்தவர் சந்திர சேகரன். திருச்சியில் எம்.சி.ஏ. படித்து விட்டு டிசிஎஸ் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் கடந்த 1987ல் பணிக்கு சேர்ந்தார். அவரது திறமைக்கு பரிசாக அவரை டிசிஎஸ் தலைவராக்கி அழகு பார்த்தது டாடா குழுமம்.

அதன்பின்னர் கடந்த அக்டோபர் 25ந்தேதி டாடா சன்ஸின் இயக்குனர்களில் ஒருவராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில்தான், பாரம்பரியமிக்க பல லட்சம் கோடி மதிப்புள்ள டாடா சன்ஸின் சேர்மன் பதவியில் அவர் அமர்த்தப்பட்டுள்ளார்.

நீண்ட தூரம் ஓடக்கூடிய மாரத்தான் போட்டிகளில் சந்திர சேகரன் ஆர்வம் கொண்டவர். இதற்காக அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார் சந்திர சேகரன். மாரத்தானைப்போல தனது துறையிலும் நீண்ட தூரம் ஓடி தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கலாம். சாதனைத் தமிழருக்கு வாழ்த்துக்கள்….

click me!