மத்திய அரசே எங்கள் உரிமையில் தலையிடாதே! – சல்லிக்கட்டுக்கு ஆதரவு போராட்டம்…

First Published Jan 13, 2017, 9:51 AM IST
Highlights

திருச்சி

மத்திய அரசே எங்கள் உரிமையில் தலையிடாதே என்று சல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும், பீட்டாவை தடை செய் என்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சல்லிக்கட்டு காளையுடன் புதன்கிழமை திரண்டு வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதி கடும் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. அவர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு பின்னரே அன்ங்கிருந்து கலைந்தனர்.

இந்த நிலையில் வியாழக்கிழமை இரண்டாவது நாளாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தமிழக வீர விளையாட்டு பேரவை, சல்லிக்கட்டு பேரவை, சல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியவாறு சல்லிக்கட்டு நடத்த வேண்டும். பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் பலர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றனர். பெண்களும் இதில் கலந்து கொண்டு தங்களது ஆதரவை சல்லிக்கட்டுக்குத் தெரிவித்தனர்.

“சல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு”, “ஏறு தழுவுதல் எங்கள் உரிமை”, “மத்திய அரசே சல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கு”, “நடத்துவோம், நடத்துவோம் தடையை மீறி சல்லிக்கட்டு போட்டி நடத்துவோம்”, “மத்திய அரசே எங்கள் உரிமையில் தலையிடாதே” என அவர்கள் முழக்கம் போட்டனர்.

சல்லிக்கட்டு ஆர்வலர்கள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒண்டிராஜ், ராஜேஷ், மகேந்திரன், மூக்கன் ஆகியோர் சல்லிக்கட்டு ஆதரித்துப் பேசினர்.

tags
click me!