மீண்டும் 8 வழிச்சாலை.? மத்திய அரசு ரெடி.. என்ன செய்யப்போகிறார் முதல்வர் ஸ்டாலின் ?

By Raghupati RFirst Published Jan 28, 2022, 8:43 AM IST
Highlights

சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிச்சாலை அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. பின்னர் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் போராட்டம் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சமீபத்தில் தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் இருந்து விவசாயிக்கு வந்த கடிதம் ஒன்று மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது. 8 வழிச்சாலைக்கான நில எடுப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறும் அந்தக் கடிதம், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெற்ற பிறகு, அரசு வழிகாட்டுதலின் படி நில எடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது என குறிப்பிடுகிறது.

இது பாப்பிரெட்டிபட்டி மற்றும் அரூர் வட்டங்களில் உள்ள விவசாயிகளை கலங்கச் செய்திருக்கிறது. வருவாய் அலுவலரின் இந்த விளக்கத்தை குறிப்பிட்டு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ், 8 வழிச்சாலை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தார். 

அதுதான் இங்குள்ள விவசாயிகளின் கேள்வியாகவும் இருக்கிறது.விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை முற்றிலுமாக தடை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இங்குள்ள விவசாயிகளின் ஒரே கோரிக்கையாக இருக்கிறது. 2018-ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. 

இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர். இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ``சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். 

எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில், ‘சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் இந்த ஆண்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார். தற்போது இந்த ஆண்டு பட்ஜெட் வெளியிடப்படும் இந்த சூழலில் இதுகுறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. 

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதுபற்றி சமீபத்தில் பேசும் போது, ‘ சேலம் எட்டு வழிச்சாலை விவகாரத்தைப் பொறுத்தவரை, அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி மத்திய அரசு இதுவரை அது குறித்துக் கடிதம் எதுவும் மாநில அரசுக்கு எழுதவில்லை. மத்திய அரசு கடிதம் அனுப்பும் பட்சத்தில் இது குறித்தான முதல்வரின் கொள்கை முடிவுப்படி செயல்படுவோம்” என்றார். எதிர்க்கட்சியாக இருந்த போது, இத்திட்டத்தை எதிர்த்த திமுக, தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் போது எட்டு வழிச்சாலை திட்டத்தை தொடங்குமா ? என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.

click me!