
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணிக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்துக்கு Mi-17V5 ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது. இந்த ஹெலிகாப்டரில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணம் செய்தனர். அப்போது கடும் பனிமூட்டம் காரணமாக காட்டேரி மலைப்பகுதியில் உள்ள மலை முகடு ஒன்றில் மோதி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக சொல்லபடுகிறது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங் 80 சதவீதத் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதை அடுத்து ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் உள்ளிட்டோர் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் உயிரிழந்த ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுமட்டுமின்றி ஜெனரல் பிபின் ராவத்தின் மறைவையடுத்து தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும், அரசு சார்ந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் பிறந்த மாநிலமான உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான பகுதியில் , இந்திய விமானப்படை தளபதி ஆர்.வி.சவுத்ரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விமானப்படை அதிகாரிகள் ஹெலிகாப்டரில் இருந்து முக்கிய பாகங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கருப்புப் பெட்டி உள்ளிட்ட முக்கிய பொருட்கள் காட்டேரி பகுதியில் உள்ள நச்சப்பசத்திரம் மலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. டெல்லியிலிருந்து வந்த தொழில்நுட்பக் குழுவும், வெலிங்டன் ராணுவ மையக் குழுவும் இதனைக் கண்டுபிடித்தாக கூறப்பட்டது.
சுமார் 3 மணிநேரமாக நடைபெற்ற தீவிரமான தேடுதலுக்குப் பிறகு இந்த கறுப்புப்பெட்டியைக் குழு கண்டுபிடித்ததாகவும் ராணுவத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துத்திற்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய இந்த கருப்புப் பெட்டி டெல்லி அல்லது பெங்களூரு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும், ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் தமிழக தடயவியல் துறை இயக்குனர் சீனிவாசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழு ஆய்வு நடத்தி வருகிறது. அதிநவீன ஹெலிகாப்டர் வகையைச் சேர்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி, தொழில்நுட்ப கோளாறு அல்லது கடும் பனிமூட்டம் ஆன மோசமான வானிலை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரணையில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது . இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் விமானப்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ராணுவ அதிகாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உதகையில் நாளை(10.12.2021) கடைகள் அடைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை கடைகள், உணவகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.