
நாமக்கல்
தற்கொலை செய்துகொண்ட ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரிடம் சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையிலான குழுவினர் தொடர்ந்து ஐந்து மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர்.
நாமக்கல் - மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் (58). தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரான இவர் கடந்த மாதம் 8-ஆம் தேதி செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள பண்ணை வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக மோகனூர் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சென்னை சி.பி.சி.ஐ.டி. துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி நாமக்கல்லில் முகாமிட்டு விசாரணை நடத்துகிறார்.
இதற்கிடையே நேற்று சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி இந்த வழக்கு விசாரணைக்காக நாமக்கல் வந்தார். காலை 8 மணிக்கு அவர் சி.பி.சி.ஐ.டி. துணை காவல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி, ஆய்வாளர் பிருந்தா ஆகியோருடன் நாமக்கல் ஆசிரியர் குடியிருப்பில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டிற்கு வந்தார்.
அங்கு சுப்பிரமணியனின் மனைவி சாந்தி, மகன் சபரீஷ், மகள் அபிநயா, மருமகள் அரவிந்த் ஆகியோரிடம் சுமார் ஐந்து மணி நேரம் அவர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, ஒப்பந்ததாரர் சுப்பிரமணியன் குறித்து பல்வேறு தகவல்களை கேட்டறிந்த அவர்கள், தற்கொலை செய்துகொள்ளும் முன்பு சுப்பிரமணியன் எழுதிய கடிதத்தில் உள்ள கையெழுத்து அவரது கையெழுத்துதானா? எனவும் கேட்டறிந்தனர்.
மேலும், கடிதம் எழுதியது போல டைரி குறிப்புகள் ஏதேனும் எழுதி உள்ளாரா? எனவும் விசாரணை நடத்தினர். வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு மிரட்டல் ஏதேனும் வந்ததா? எனவும் கேட்டறிந்தனர். அத்துடன் சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் அவரது வீட்டின் அருகே உள்ள சுப்பிரமணியனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமான காரில் ஏதேனும் ஆவணங்கள் உள்ளதா? எனவும் பார்வையிட்டனர். இந்த விசாரணை பிற்பகல் ஒரு மணி அளவில் முடிவடைந்தது.
பின்னர் செவிட்டுரங்கன்பட்டிக்கு சென்ற காவல் கண்காணிப்பாளர் நாகஜோதி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் அங்கு சுப்பிரமணியன் விஷம் குடித்து மயங்கி கிடந்த அறையை பார்வையிட்டனர். மேலும், அங்கு வேலை பார்த்து வரும் நபர்களிடமும் விசாரணை நடத்தினர்.
முழுமையான விசாரணைக்கு பிறகு சுப்பிரமணியனை தற்கொலைக்கு தூண்டி இருப்பது உறுதி செய்யப்பட்டால், தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சி.பி.சி.ஐ.டி. காவலாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.