
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் தறிக்கெட்டு தாறுமாறாக ஓடிய கார் இரண்டு வேன்கள் மீது அடுத்தடுத்து மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், அழகேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மகிமைதாஸ் (29). இவர் தனது நண்பருடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டு கிழக்கு கடற்கரை சாலை வழியாக காரில் மாமல்லபுரம் நோக்கி வந்துக் கொண்டிருந்தார்.
அவரது கார் மாமல்லபுரம் அருகே மணமை என்ற இடத்தில் வரும்போது திடீரென தறிக்கெட்டு தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த இரண்டு வேன்கள் மீது அடுத்தடுத்து அந்த கார் வேகமாக மோதியது. பின்னர் அந்த கார் பக்கத்தில் உள்ள பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் காரில் வந்த மகிமைதாஸ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு வேன்களில் வந்த 15 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தால் மணமை இ.சி.ஆர். சாலையில் அரை மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.