லாரியின் அடியில் கார் சொருகி விபத்து; இருவர் பலி…

First Published Dec 12, 2016, 12:22 PM IST
Highlights


ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடியில், முன்னால் சென்ற லாரியின் மீது பயங்கரமாக கார் மோதி லாரியின் அடியில் சொருகி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த இருவர் பலியாயினர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி பாத்திமா நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (44). கிரேன் இயந்திர உரிமையாராக இருக்கிறார். இவரது கிரேன் இயந்திரம் திருவனந்தபுரம் பகுதிக்கு அனுப்பி வைக்கப்படது. அங்கு, கிரேன் இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது.

அந்த பழுதை சரிசெய்வதற்காக பிரேம்குமார், அவருடைய உறவினர் கிப்சன் (29) ஆகியோர் திருவனந்தபுரத்திற்குச் சென்றனர். இதில் கிப்சன் குவைத் நாட்டில் கிரேன் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று அதிகாலையில், கிரேன் பழுதை சரிசெய்வதற்கு சில உதிரி பாகங்கள் தேவைப்பட்டது. அந்த உதிரி பாகங்களை வாங்குவதற்காக ஒரு காரில் மதுரைக்குச் சென்றனர்.

காரில் பிரேம்குமார், கிப்சன், கிரேன் எந்திர பணியாளரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அஜித் (21), திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுபிசன் ஆகிய 4 பேர் இருந்தனர். காரை கிப்சன் ஓட்டிச் சென்றார்.

மதுரையில் கிரேன் உதிரி பாகங்களை வாங்கிவிட்டு, 4 பேரும் தூத்துக்குடி நோக்கி காரில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

தூத்துக்குடி அருகேயுள்ள எப்போதும் வென்றானை அடுத்த மஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் மதியம் 12 மணி அளவில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு உருளைக்கிழங்கு லோடு ஏற்றி வந்த ஒரு லாரி முன்னால் சென்று கொண்டு இருந்தது.

அப்போது, எதிர்பாராதவிதமாக அந்த லாரியின் பின்பகுதியில் கார் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரின் முன்பகுதியானது லாரியின் அடியில் சொருகிக் சிக்கிக் கொண்டது.

அந்த காருக்குள் இருந்தவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். அதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் எப்போதும் வென்றான் காவலாளர்கள் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

இதில் காரை ஓட்டி வந்த கிப்சன், சுபிசன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரேம்குமார், அஜித் ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றனர். அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடியில் உள்ள வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.

கிப்சன், சுபிசன் ஆகியோரின் உடல்கள் உடற்கூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

விபத்து குறித்து எப்போதும்வென்றான் காவல் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், சப்–இன்ஸ்பெக்டர் ஜேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

லாரி ஓட்டுநர் மலையரசனை பிடித்து காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

click me!