
நாகர்கோவில்
வருகிற 27–ஆம் தேதி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துவது என்றும் நேற்று போராட்டம் நடத்திய இளைஞர்கள் அறிவித்தனர்.
குமரி மாவட்டத்தில் வாட்ஸ்அப் குழு மூலமாகவும், முகநூல் பதிவுகள் மூலமாகவும் நேற்று மதியம் பிற்பகல் 3 மணி அளவில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் சல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற ஒரு தகவல் பரவியது.
இதனையடுத்து சல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர்கள், இளைஞர்கள், வணிக நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 150–க்கும் மேற்பட்டோர் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில் ஏராளமான காவலாளர்களும் அங்கு கூடினர்.
போராட்டத்தின்போது சல்லிக்கட்டு நடத்த அனுமதி தராத மத்திய – மாநில அரசுகளை கண்டித்தும், சல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடைச் செய்யவும் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி, சனநாயக ஊழல் விடுதலை முன்னணி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், அவர்களும் சல்லிக்கட்டு ஆதரவளராக கூட்டத்தில் ஒருவராக கலந்து கொண்டனர். இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டம் ஒத்த கருத்து கொண்ட கொள்கைக்காக மட்டுமே நடைப்பெற்றது எனபது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக வருகிற 27–ஆம் தேதி பத்மநாபபுரம் அரண்மனை முன்பு தடையை மீறி சல்லிக்கட்டு நடத்துவது என்றும் போராட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.
போராட்டத்தின் முடிவில் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தங்களது வாட்ஸ்அப் எண், செல்லிடப்பேசி எண்ணை பரிமாறிக் கொண்டனர்.