கடந்த 2022 மார்ச் மாதத்துடன் முடிந்த மாநில நிதிநிலை மீதான இந்திய தணிக்கைத் துறை தலைவரின் (CAG) அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் பற்றிய சி.ஏ.ஜி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துள்ளது.
- கடந்த 2016-21 ஆண்டு ஆட்சியில் தமிழ்நாடு அரசு உயர்நிலை பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் 14.76% சதவீதமும், மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 11.84% சதவீதமும் குறைந்துள்ளது.
- 2016-21 ஆண்டு தரம் உயர்த்தப்பட்ட 528 பள்ளிகளில் 515 பள்ளிகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை மற்றும் போதிய உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்களை பணி நியமனம் செய்யவில்லை.
- 2016-21 மாநில அரசாங்கத்தின் பட்ஜெட்டில் பள்ளிக்கல்விக்கு போதிய முன்னுரிமை வழங்கவில்லை. இதனால் 2016-17ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) 0.94% சதவீதத்தில் இருந்து 2020-21ல் 0.85% சதவீதமாக குறைந்துள்ளது.
- மேற்கூறிய நிர்வாகத் திறன் குறைவால் தமிழ்நாட்டில் 11,711 வகுப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளது. தற்போது நடைபெற்று வரும் பணிகளின் வேகத்திலும் அடுத்த 10 ஆண்டுகளில் கூட இந்த இடைவெளியை குறைக்க முடியாது.
- அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள ஆண்டிற்கு 2400 கோடி ரூபாய் சில திட்டங்களுக்கு செலவிடப்பட்டும் அனைத்து மட்டங்களிலும் நிலவிய திறமையற்ற நிர்வாகத்தால் அவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
- இலவச மடிக்கணினி, காலணி மற்றும் பள்ளி பை வழங்கும் திட்டங்களை செயல்படுத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றதால் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவை முறையாக சென்றடையவில்லை.
- ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா நோட்டு புத்தகங்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால், வீண் செலவு மற்றும் அரசு நிதி தேவையில்லாமல் முடக்கப்பட்டுள்ளது.
- ஒரே IP addressல் இருந்து பல கம்பெனிகள் டெண்டர்களுக்கு விண்ணப்பித்துள்ளன, நெடுஞ்சாலைத்துறையின் கம்பியூட்டரில் இருந்தே சிலர் டெண்டருக்கு விண்ணப்பித்துள்ளனர்.
- சில குடும்ப உறுப்பினர்கள் cartel அமைத்து அவர்களுக்கு உள்ளேயே டெண்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் விதிகளின்படி டெண்டர்களை கையாளும் பணிக்கு இளநிலை அளவில் உள்ள அதிகாரிகளை நியமனம் செய்யக்கூடாது என்ற விதியை மீறி டைப்பிஸ்ட்டுகள், இளநிலை பொறியாளர்களை கொண்டு டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.