
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த போராட்டத்தைத் தடுக்க பல்வேறு கட்டங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்றது. ஆனால் இதில் முடிவு எட்டப்பாடாததால் இன்று முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் போக்குவரத்துத் துறை ஊழியர்கள் நேற்றே வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுவதும் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று முதல் தங்களது காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டதை போக்குவரத்துத் துறை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
சென்னையில் பல்லவன் பணிமனை முன்பு ஏராளமான ஊழியர்கள் திரண்டுள்ளனர். ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. பணிமனை முன்பு போராட்டத்தில் ஏற்பட்டு ஊழியர்கள் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படவில்லை, அனைத்துப் பேருந்துகளுமே பணிமனைகளுக்குள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்துப் பேருந்துகளுமே இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஸ்ட்ரைக் காரணமாக பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.