கிரிவலப் பாதையில் 13 நாட்களாக பற்றி எரியும் தீ; நச்சுப் புகையால் மக்கள் பெரும் பாதிப்பு...

By Suresh ArulmozhivarmanFirst Published Aug 15, 2018, 12:34 PM IST
Highlights

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் தொடர்ந்து 13 நாட்களாக தீ பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் நச்சுப் புகையால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். 

திருவண்ணாமலையின் கிரிவலப் பாதையில் தொடர்ந்து 13 நாட்களாக தீ பற்றி எரிந்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் நச்சுப் புகையால் மக்கள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ-வான எ.வ.வேலு தெரிவித்தார்.

தி.மு.க. எம்.எல்.ஏ-வான எ.வ.வேலு நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "திருவண்ணாமலை - அவலூர்பேட்டை இரயில்வே கேட் அருகே நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு ஒன்று உள்ளது. இந்தக் குப்பைக் கிடங்கு கிரிவலப் பாதையிலும், குடியிருப்புகளுக்கு நடுவிலும் அமைந்துள்ளது. 

இந்த நிலையில் இக்குப்பைக் கிடங்கில் கடந்த 1-ஆம் தேதி அன்று தீப்பிடித்தது. இன்று வரை (அதாவது நேற்று)தொடர்ந்து 13 நாட்களாக இந்தத் தீ எரிந்து வருகிறது. தண்ணீர் ஊற்றி அணைக்கத் தீயணைப்புத் துறையும், நகராட்சி நிர்வாகமும் எவ்வளவோ முயன்றும் தீ அணைந்த பாடில்லை.

13 நாட்களாக தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கும் இந்தத் தீயால் அவலூர்பேட்டை, போளூர், ஐயப்பன் நகர், கிருஷ்ணா நகர், தென்றல் நகர், வேங்கிகால் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிரிவலப் பக்தர்கள் என அனைவரும் நச்சுப்புகையை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்கள் அனைவரும் பெரும் பாதிப்பும் அடைந்து வருகின்றனர்.

எனவே, மக்களை பாதிப்பில் இருந்து விடுவிக்க மாவட்ட மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையைத் தடுக்க வேண்டும். இல்லையென்றால் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பெரும் போராட்டம் நடத்தப்படும்" என்று அதில் தெரிவித்து இருந்தார்.

click me!