
ஜி.எஸ்.டி. வரியில் இருந்து கட்டிடப் பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாகப்பட்டினம் கட்டிடத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில கட்டிடத் தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்டத் தலைவர் சண்முகவேல் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முத்தையன், மாவட்டப் பொருளாளர் முனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் துணைச் செயலாளர் ருத்திராபதி வரவேற்றார்.
மாநிலத் தலைவர் செண்பகசுப்பு, மாநிலப் பொதுச் செயலாளர் சுப்பு, சேலம் மாவட்டச் செயலாளர் கதிர்வேலு ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் “ஜி.எஸ்.டி. வரியில் இருந்து கட்டிடப் பொருட்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
கட்டிடத் தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. மருத்துவ வசதியை உடனே அமல்படுத்த வேண்டும்.
இயற்கை மரணத்திற்கான உதவித் தொகையை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
கட்டுமான நலவாரிய அலுவலகத்தில் தமிழ்மாநில கட்டிட தொழிலாளர்கள் சங்கத்திற்கு முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், மழைக்கால நிவாரணமும் வழங்க வேண்டும்” உள்ளிட்டப் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டன.
இதில் தமிழ்மாநில கட்டிடத் தொழிலாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் நாகப்பட்டினம் நகரச் செயலாளர் சத்திய சுந்தரம் நன்றித் தெரிவித்தார்.