விதிகளை மீறி ஓடும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க – விரிவான அறிக்கை கேட்டது உயர்நீதிமன்றம்…

 
Published : Jul 26, 2017, 08:05 AM ISTUpdated : Sep 19, 2018, 12:56 AM IST
விதிகளை மீறி ஓடும் ஆட்டோக்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீங்க – விரிவான அறிக்கை கேட்டது உயர்நீதிமன்றம்…

சுருக்கம்

What action did you take on the autos that violate rules - asked the detailed report of the High Court ...

மதுரை

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தை சேர்ந்த வழக்கறிஞர் பாலமுருகன் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “கடந்த 2001–ஆம் ஆண்டு தமிழகத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயங்குவதற்கு அனுமதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த ஷேர் ஆட்டோக்களில் ஓட்டுநரை தவிர ஐந்து நபர்கள் பயணம் செய்யவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கலாம் என்றும் அனுமதிக்கப்பட்டது.

ஆனால், மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிராக அளவுக்கு அதிகமாக ஷேர் ஆட்டோக்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. மேலும் மூன்று நபர்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஆட்டோவை ஐந்து நபர்கள் பயணிக்கும் ஷேர் ஆட்டோக்களாக ஓட்டி வருகின்றனர்.

இதனைத் தடுக்க வேண்டிய போக்குவரத்து அதிகாரிகள் ஆட்டோக்களுக்கு தலா ரூ.100 மட்டும் அபராதம் விதித்து ஆட்டோவை விட்டுவிடுகிறார்கள். சாலைகளில் பெருவாரியான விபத்துகளுக்கு ஷேர் ஆட்டோக்களே காரணமாக உள்ளன.

மதுரையில் மட்டும் 5 ஆயிரத்து 354 ஆட்டோக்கள் ஷேர் ஆட்டோக்களாக ஓடுகின்றன. எனவே மூன்று நபர் பயணிக்கும் ஆட்டோக்களை ஷேர் ஆட்டோக்களாக இயக்க அனுமதிக் கூடாது என்று உத்தரவிட வேண்டும். சம்பந்தப்பட்ட ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சத்யா புஷ்பநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஆஜராகி, "மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 7 ஆயிரத்து 900 ஆட்டோக்கள் ஓடுகின்றன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விதிமீறலில் ஈடுபட்டதாக 915 ஆட்டோக்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. 1 கோடியே 67 இலட்சத்து 27 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதனையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து தற்போது வரை விதிமீறலில் ஈடுபட்ட ஆட்டோக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்