
திருநெல்வேலி
திருநெல்வேலியில் வீட்டை எழுதித் தர மறுத்த தம்பியின் மனைவியை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவாகியுள்ள அண்ணனை காவலாளர்கள் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி இந்திரா (50). இவர்களுடைய மகன் பாண்டியராஜன் (18) மாற்றுத்திறனாளி.
ராஜேந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதால் இந்திரா தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார். ராஜேந்திரனின் அண்ணன் ஞானகுரு (55). இவர் திருநெல்வேலி நகரில் உள்ள இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலையில் ஞானகுரு, இந்திராவிடம் சென்று உனது வீட்டை எனக்கு எழுதித் தருமாறு தகராறு செய்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஞானகுரு தன்னிடம் இருந்த கத்தியால் இந்திராவை சரமாரியாக குத்தினார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் தடுக்க முயன்றார். ஆனால், அவரையும் ஞானகுரு கீழே தள்ளிவிட்டு தாக்கியுள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவத்தில் இந்திரா, அவருடைய மகன் பாண்டியராஜன் ஆகியோர் காயமடைந்தார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பேட்டை காவல் உதவி ஆய்வாளர் திருப்பதி வழக்குப்பதிந்து தப்பித்து ஓடிய ஞானகுருவை வலைவீசி தேடிவருகின்றனர்.