
கடலூர்
காவலரை அசிங்கமாக திட்டி, தாக்கிய அண்ணன், தம்பிகளுக்கு சிறை தண்டனையும், அபராதமும் விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடலூர் மாவட்டம், நடுவீரப்பட்டு வாண்டுராசன்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். இவருடைய மகன் காசிநாதன் (35). இவர் சோழத்தரம் காவல் நிலையத்தில் காவலாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 15.6.2016 அன்று காசிநாதன் வேலைக்கு புறப்பட்டபோது, ராதாகிருஷ்ணன் மகன்கள் தெய்வீகன் (32), புகழ்செல்வன் (30), தமிழ்ச்செல்வன் (28) ஆகிய மூவரும் அவரை வழிமறித்து அசிங்கமாக திட்டியும், தாக்கியும் கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து காசிநாதன் நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் காவலாளர்கள் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் மாஜிஸ்திரேட்டு 1–வது நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி கோபாலக்கண்ணன் தீர்ப்பு அளித்தார்.
அந்த தீர்ப்பில், "இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தெய்வீகனுக்கு ஆறு மாதமும், புகழ்செல்வனுக்கு மூன்று மாதமும், தமிழ்ச்செல்வனுக்கு மூன்று மாதமும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது" என்று கூறினார். மேலும், மூவருக்கும் சேர்த்து ரூ.5500 அபராதமும் விதித்தார்.